Sunday, December 24, 2006

தந்தை பெரியார் கடவுளாக்கப்படுகிறாரா?

சொல், செயல் அனைத்தும் அறிவு, ஆராய்ச்சி, அனுபவங்களுக்கு ஒத்து வருகிறதா?

ந்தியாவின் வடமாநிலங்களோடு நம் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இன்றளவும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அதிகமான அளவில் சகோதர வாஞ்சையோடு பழகி வருகிறார்கள். தமிழகத்தில் இப்படியொரு சகோதர வாஞ்சையுடனான உறவு நீடிப்பதற்கு உறமிட்டவர்களில் தந்தை பெரியாரின் பங்கு அலாதியானது.

கடவுளை மற, மனிதனை நினை என்றும், கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் சொன்ன தந்தை பெரியாரின் உருவச்சிலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய கொள்கைகளை எடுத்தியம்பும் அதே வேளையில் அவருக்கு சிலை வைப்பதையும் ஒரு கொள்கையாக செய்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்திலே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.வீரமணி அவர்கள் பெரியார் சிலையைச் சிதைப்பதால் பெரியார் கொள்கையை அழித்துவிட முடியாது! என்றும், கழகத் தோழர்களே, முன்னிலும் வேகமாகச் செயல்படுவீர்! என்றும், ஊருக்கு ஊர் பெரியார் சிலை வைப்போம்! பெரியார் கொள்கை நாடெங்கும் பரவும் வகை செய்வோம்! என்றும் கூறியிருக்கிறார்.

ஒருவேளை தந்தை பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் தனக்காக வைக்கப்படும் சிலையையும், திரு.வீரமணி அவர்களுடைய கருத்துக்களையும் அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே! ஏனெனில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக கருப்புச்சட்டைக்காரர்கள் பல தருணங்களில் இப்படிச்சொல்வார்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். 'நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்' என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள், என்று.

தந்தை பெரியாரே சொன்னாலும் தனது அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து. அப்படியிருக்க தனக்காக சிலை வையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்களால் சொல்லப்படாமல் இருக்க அவர் பெயர் சொல்லி அவருக்கு சிலை வைப்பதும், அப்படி செய்தால்தான் அவருடைய கொள்கை நாடெங்கும் பரவும் என்று சொல்வதும் கருப்புச்சட்டை அணிந்திருக்கும் சகோதரர்களின் அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவருவது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இப்படி செய்வதால் நாடெங்கும் என்ன பரவும் என்பதற்கு ஸ்ரீரங்கம் ஒரு உதாரணமாக தெரிகிறது.

ஒரு கொள்கை நாடெங்கும் பரவுவதற்கு அந்த கொள்கையை சொன்னவருடைய சிலையை நாடெங்கும் நிறுவுவதுதான் சரி என்றால் அது அறிவு சார்ந்த ஆராய்ச்சி அல்ல என்று இஸ்லாம் மறுக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய தீபகற்பத்தில் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவனுமில்லை என்று இஸ்லாத்தை எடுத்தியம்பிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உலகில் எந்த இடத்திலும் சிலை இல்லை.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சிலை வைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் கூட உலக முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய ஓரிறைக்கொள்கை உலகில் எங்கும் பரவாமல் முற்று பெற்றுவிட்டதா?

இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரியாக திகழக்கூடியவர்களில் முதன்மையான எதிரியாக இருக்கக்கூடிய அமெரிக்காவில் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய இஸ்லாம் என்னும் ஓரிறைக் கொள்கை வேறூன்றி மரமாக வளரத்தொடங்கி விட்டது. இவ்வுலகமே சொர்க்கம் என்று வாழ்வை கடத்தக்கூடிய பல மேற்கத்திய நாடுகளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எடுத்தியம்பப்பட்ட ஒரிறைக் கொள்கை வலுவான பாதங்களை பதித்துக் கொண்டிருக்கிறது. உலகில் எந்த மூலையிலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்களை உலகில் வாழக்கூடிய கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் கருப்புச்சட்டை சகோதரர்களின் பகுத்தறிவுக்கு எதை உணர்த்துகிறது?

உலகில் சிலை வைத்துதான் கொள்கையை பரப்ப வேண்டும் என்று சொல்வது அறிவு சார்ந்த வாதமில்லை என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவு கொண்டு சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகளும் காத்திருக்கின்றன.

உலகின் எந்த இடத்திலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதாக பல தகவல்களை இவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதில் பிறமத கடவுளரை நீங்கள் விமர்சிக்காதீர்கள், அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் உங்கள் இறைவனை விமர்சிப்பார்கள் என்பதும் ஒன்று.

இந்த அடிப்படையில் ஸ்ரீரங்கத்தில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட பெரியார் சிலை சம்பவத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் போது கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருப்புச்சட்டை சகோதரர்களால் கடவுளாக்கப்படுகிறாரா என்ற கேள்வியே எழுகிறது. ஏனெனில் சமூக விரோத கும்பல்களால் தந்தை பெரியாரின் சிலைதான் உடைக்கப்பட்டது. ஆனால் கருப்புச்சட்டை சகோதரர்களால் ஈரோடு, சேலம், சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் போன்ற இடங்களில் உடைக்கப்ட்டது ஹிந்துக்கள் கடவுளாக மதிக்கக்கூடிய சாமி சிலைகள், பிள்ளையார் சிலைகள் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது. அப்படி என்றால் கருப்புச்சட்டை சகோதரர்கள் தந்தை பெரியாரை தங்களது கடவுளாக கருதுகிறார்களா?

ஒரு கொள்கையை சொன்னவரை கௌரவிப்பது என்பதும், ஓரு கொள்கையை பரப்புவது என்பதும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதிலும், அதை நடைமுறை படுத்துவதிலும் தான் இருக்கிறது. சிலை வைத்துதான் கொள்கை பரப்ப வேண்டும் என்று சொல்வது அன்பே கடவுள் என்று சொன்ன புத்தரின் பேரில் புத்த மதம் தோன்றியது போன்று, கடவுளை மறுத்த தந்தை பெரியாரை கடவுளாக்குவது போலவே இருக்கிறது.

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35:3)

No comments: