Monday, December 25, 2006

கருணாநிதி வீட்டு முன்பு ஜெயலலிதா சிலை!

? ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் ஈ.வெ.ரா. பெரியார் சிலை வைப்பது குறித்து முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்க வேண்டும்?

எஸ்.எம். முஹைதீன், சென்னை - 84

! இது குறித்து இஸ்லாத்தின் கருத்து மிகத் தெளிவானது. கடவுள்கள் என்று கருதப்படுபவர்களுக்கோ தலைவர்களுக்கோ சிலைகள் வைப்பது அறவே கூடாது என்பது தான் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்களின் கருத்தும் இதுதான்.

கல்லுக்கு சக்தி உண்டா? என்று ஒருபுறம் பேசிக் கொண்டு இன்னொரு கல்லை மதிப்பது முரண்பாடானது என்பதில் இஸ்லாம் மிகத் தெளிவாகவுள்ளது.

பெரியாரை அவரது தொண்டர்கள் மதிப்பதை விட பல கோடி மடங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. யாரேனும் வைக்க முயன்றால் அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு சிலை வைப்பதில் முஸ்லிம்கள் கடுமையான வெறுப்புக் கொண்டுள்ளனர்.

சிலைகள் வைக்கும் கலாச்சாரம் பெருகிய பிறகு, சிலைகள் பல்வேறு கலவரங்களுக்கு காரணமாக அமைவதையும் நாம் காண்கிறோம்.

சிலைகள் மூலம் தான் ஒருவரது புகழைத் தக்க வைக்க முடியும் என்பதும் மூட நம்பிக்கையே. சிலை வைக்கப்படாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவுக்கு சிலை வைக்கப்பட்டவர்கள் புகழ் அடைய முடியவில்லை என்பதே இதற்குச் சான்றாகவுள்ளது.

தலைவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் வைக்கப்பட்ட சிலைகள் தான் பிற்காலத்தில் கடவுள்களாகக் கருதப்பட்டன என்பது வரலாறு. இன்று தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் சில வருடங்களில் கடவுள்களாக மாறும் என்பதை மறுக்க முடியாது.

பெரியாருக்கோ வேறு எந்தத் தலைவருக்கோ கோவில் எதிரிலோ வேறு எந்த இடத்திலோ அறவே சிலை வைக்கக் கூடாது என்பது தான் முஸ்லிம்களின் நிலை என்பதை நாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறோம்.

அதே சமயம் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் தான் அறிவுப் பூர்வமான இந்த நிலைப்பாட்டை ஏற்பார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பவர்கள் இதை உணர மாட்டார்கள். ஏற்கவும் மாட்டார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையில் நமது கருத்து இதுதான் என்றாலும் மார்க்கத்தை ஏற்காதவர்கள் சிலை வைக்கும் விசயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

காய்தல் உவத்தல் இன்றி எல்லா நிலையிலும் முஸ்லிம்கள் நீதி வழுவாமல் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு எதை விரும்புகிறார்களோ அது போன்றதைத் தான் மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய கோவிலின் எதிரில் அக்கோவிலையும் அதில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலையையும் கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா பெரியாரின் சிலையை நிறுவுவது அறிவுடமையாகாது. ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் இது பிரச்சனையை ஏற்படுத்தவே செய்யும்.

திருவல்லிக்கேணி பள்ளிவாசலின் அருகே விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோல் இந்துக்கள் மட்டுமே நிறைந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களின் மத அடிப்படையிலான ஊர்வலங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு என்ன காரணம்? தெருக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் நேர் எதிர் சிந்தனை கொண்ட இரு சாரார் மோதிக் கொள்ளும் வாசலை அடைக்க வேண்டும் என்பதால் தான் இவ்வாறு முடிவு எடுக்கப்படுகிறது. இதை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

வீதிகள் அனைவருக்கும் சொந்தம் என்று காரணம் காட்டி திருவல்லிக்கேணி மசூதிக்கு முன்னால் விநாயகர் ஊர்வலம் நடத்துவதை நாம் ஏற்க மறுப்பதற்கு உள்ள எல்லா நியாயங்களும் ஸ்ரீரங்கம் கோவிலை வழிபடும் மக்களுக்கும் உள்ளன.

நாளை பள்ளிவாசலுக்கு எதிரில் அல்லது சர்ச்சுகளுக்கு எதிரில் தான் பெரியார் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடிக்க இது வழி வகுக்கும் என்பதையும் நாம் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

பகுத்தறிவுப் பாதையில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இதை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் விளைவுகளைக் கவனித்து அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஒருவர் தனக்கு விருப்பமானவரின் சிலையை நிறுவிக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை புரிந்து கொள்வதில் பெரும்பாலும் இந்திய மக்கள் தவறிழைக்கிறார்கள்.

ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவிக் கொள்ளலாம் என்பது தான் இதன் கருத்து. யாருக்கும் சொந்தமில்லாத அல்லது அனைத்து தரப்பினருக்கும் சொந்தமான அரசு இடத்தில் தனக்கு விருப்பமான சிலையை நிறுவிக் கொள்ளலாம் என்பது இதன் பொருளல்ல.

இதுபோன்ற பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது என்றால் எவரும் ஆட்சேபிக்காத போது தான் அரசு அதை அனுமதிக்க வேண்டும். இதுதான் நேர்மையான நியாயமான முடிவாகும்.

கருணாநிதியின் வீட்டு வாசலுக்கு எதிரில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டால் அதைக் கருணாநிதியால் ஒருக்காலும் சகித்துக் கொள்ள முடியாது. அதுபோல் ஜெயலலிதாவின் வீட்டு வாசலுக்கு முன் னால் கருணாநிதி சிலை வைக்கப்பட்டால் அதை ஜெயலலிதா சகிக்க மாட்டார். அப்படி வைக்கப்பட்டால் அது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும்.

அதுபோல் வீரமணியின் வீட்டுக்கு எதிரே விநாயகரின் சிலையை வைத்தால் அல்லது அவரிடமிருந்து பிரிந்து சென்ற வர்களின் சிலையை வைத்தால் அதை ஆதரித்து வீரமணியால் அறிக்கை வெளியிட முடியாது.

இதே அடிப்படையில் தான் ஸ்ரீரங்கம் விவகாரத்தை அரசு அணுகியிருக்க வேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் எவ்வளவோ இடங்கள் உள்ளன. பிரச்சனைக்கு வழிவகுக்காத இடத்தில் அவர்கள் சிலை வைக்க முடியும். அல்லது கோவிலுக்கு எதிரில் தான் வைப்போம் என்பதில் உறுதியாக இருந்தால் சொந்தப் பணத்தில் கோவிலுக்கு எதிரில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே சிலை வைக்கலாம். சொந்த இடத்தில் சிலை வைப்பதை மற்றவர்கள் ஆட்சேபிக்கும் உரிமை கிடையாது.

திராவிடர் கழகத்தினர் கோவிலுக்கு எதிரே தான் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடித்து சிலை வைத்ததும், அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்ததும் அமைதியை விரும்பும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நியாயமற்ற நடவடிக்கையாகும்.

ஒருவரது நம்பிக்கையைப் புண்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதற்கு இது முன்னுதாரணமாகக் கொள்ள வழிவகுக்கும்.

கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கலவரங்கள் தொடர்வதற்கு அவரது இதுபோன்ற விவேகமற்ற நடவடிக்கைகள் தான் கடந்த காலங்களில் காரணமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி - உணர்வு

Sunday, December 24, 2006

கிருஷ்ணா கமிஷன் - ஓர் நினைவூட்டல்.

இந்திய அரசியல்வாதிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோக பட்டியலில் இதுவும் ஒன்று.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் 1992 டிசம்பர் மற்றும் 1993 ஜனவரி மாதங்களில் மும்பையில் வரலாறு காணாத வகுப்பு வாத படுகொலைகள் நடைபெற்றன. மும்பையின் ஹிட்லர் பால்தாக்கரேயின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன.

சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முஸ்லிம் விரோத படுகொலைகளின் வரிசையில் மும்பை கலவரமும் இடம் பெற்றது.

ஹிந்து பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு அனைத்தும் நடந்து முடிந்த பின் விசாரனை கமிஷன் ஒன்றை அமைத்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இந்த விசாரனை கமிஷனைத்தான் கிருஷ்ணா கமிஷன் என்று இங்கு நாம் நினைவு கூர்ந்து கொள்வோம்.

பொதுவாக ஒரு பிரச்சனையை தொடர்ந்து அமைக்கப்படும் கமிஷன் என்பது அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் தக்க வைத்துக் கொள்வதற்கும், உலக அரங்கில் தங்களை ஒரு ஜனநாயகவாதிகளாக சித்தரித்து கொள்வதற்கும் இந்தியாவின் அயோக்கிய அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த எதார்த்த நிலையிலிருந்து கிருஷ்ணா கமிஷன் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன?

கிருஷ்ணா கமிஷன் தனது விசாரணையை துவக்கி சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு தேர்தலையும் சந்தித்தது. அந்த தேர்தலில் சுதாகர்ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மன்னை கவ்வி வீடுபோய் சேர்ந்தது. பிறகு பதவியேற்ற சிவசேனை, பா.ஜ.க போன்ற பயங்கரவாதிகளின் தலைமையிலான அரசாங்கம் இந்த கிருஷ்ணா கமிஷனை கலைத்தது. சிவசேனைப் போன்ற ஹிந்து பயங்கரவாத கும்பல்களின் ஆட்சியில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அன்று இருந்தது.

இப்பயங்கரவாதிகளின் நடவடிக்கையை கண்டித்து அன்று அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு மீண்டும் கிருஷ்ணா கமிஷன் தொடர்ந்து செயல்பட்டது. வழக்கம் போல விசாரணைகள் முடிக்கிவிப்பட்டது.

மும்பை கலவரங்கள் பற்றியும் அதன் பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பற்றியும் விசாரணையை முடித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அன்றைய சிவசேனா அரசு தயக்கம் காட்டி வந்தது. அறிக்கையை வெளியிடத் தயங்கியதற்கு உண்மையான காரணம் சிவசேனை தலைவரான பயங்கரவாதி பால்தாக்கரே மீது கிருஷ்ணா கமிஷன் அறிக்கை கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்ததுதான்.

கிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் சில..

கலவரத்திற்குப் பிறகு மும்பையின் மேயராக பதவியேற்ற மிலந்த்வைத்யா என்ற பயங்கரவாதி முஸ்லிம்களுக்கு எதிராக போலிஸ்காரர்களுடன் சேர்ந்து வாள் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டார்.

சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசிற்கு பின்பு பதவியேற்ற சிவசேனை - பா.ஜ.க அரசாங்கத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கஜானன் கிருட்டிகார் என்பவர் கலவரத்தின் போது ஒரு கும்பலுக்கு தலைமை தாங்கினார். இந்த கும்பலில் உள்ள பயங்கரவாதிகள்தான் ஒரு பள்ளிவாசலையும் தாக்கி சேதப்படுத்தினார்கள்.

கலவரத்தின் போது அதிகமான முஸ்லிம்கள் இறந்து போனதற்கும், காயமுற்றதற்கும் காரணம் என்னவென்றால் சிறுபான்மையினர் மீது ஹிந்து பயங்கரவாதிகளின் ஆதிக்க உணர்வும், காவல்துறை தன்னகத்தே கொண்டிருந்த முஸ்லிம் விரோத மனப்பான்மையுமே என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்தின் போது மும்பை மாநகர கூடுதல் காவல்துறை ஆணையாளராக இருந்த ஆர்.டி.டியாகி உட்பட 32 போலிஸ்காரர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருந்தார். (ஆர்.டி.டியாகி ஓய்வு பெற்ற உடன் சிவசேனை கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கலவரம் நடந்த 11-01-1993 அன்று சிவசேனையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மதுக்கர் சர்போட்தார், அவரது மகனான அதுல் மற்றும் 5 பேரும் ஜீப் ஒன்றில் 32 ரக இயந்திர துப்பாக்கிகள் இரண்டு, இருபது ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் 99 எம்.எம் ரக கைத்துப்பாக்கியும், இரண்டு வெட்டு அரிவாள்களும் எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அணி அவர்களது ஜீப்பை இடைமறித்து சோதனையிட்ட பிறகும் அன்றைய காங்கிரஸ் அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மிகுந்த கால தாமதம் காட்டியது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிவசேனை கிளைத்தலைவர்கள் முதல், சிவசேனை தலைவரான பால்தாக்கரே வரை பல சிவசேனை தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களது சொத்துக்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு தாக்குதல்களை தொடுப்பதற்கு தலைமை வகித்துள்ளனர் என்றும் பால்தாக்கரே ஒரு அனுபவம் வாய்ந்த ராணுவத் தளபதி போல செயல்பட்டு தனது விசுவாசமிக்க சிவசேனைக்காரர்களைக் கொண்டு வழிநடத்தினார் என்றும் ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்திற்கு காரணமாக அத்வானியின் ரதயாத்திரையும் அமைந்திருந்தது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்களை தாங்கி சமர்ப்பிக்கபட்ட கிருஷ்ணா கமிஷன் அறிக்கை எதிர்பார்த்தது போலவே குப்பைத் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்தது.

ஓவ்வொரு முறையும் முஸ்லிம்களின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து காய் நகர்த்தும் இந்தியாவின் அயோக்கியத்தனமாக அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க உளப்பூர்வமாக முற்படுவதில்லை. சட்டத்தின் வளைவு, நெலிவுகளில் புகுந்து அவ்வப்போது ஹிந்து பயங்கரவாதிகள் தப்பி வருவதும், முஸ்லிம்கள் என்றால் சட்டம் அவர்களை இருக்கிப் பிடிப்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கேலி செய்வது போவவே இருக்கிறது.

நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு என்று மேடைகளில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் இந்தியாவின் அயோக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு முறையேனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை திறந்த மனதுடன் படிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு, ஒழுக்கம், பிறமதத்தினரின் உரிமை பேணுதல் போன்ற எண்ணற்ற விசயங்களை புரிந்து கொள்ள முடியும்.

தந்தை பெரியார் கடவுளாக்கப்படுகிறாரா?

சொல், செயல் அனைத்தும் அறிவு, ஆராய்ச்சி, அனுபவங்களுக்கு ஒத்து வருகிறதா?

ந்தியாவின் வடமாநிலங்களோடு நம் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இன்றளவும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அதிகமான அளவில் சகோதர வாஞ்சையோடு பழகி வருகிறார்கள். தமிழகத்தில் இப்படியொரு சகோதர வாஞ்சையுடனான உறவு நீடிப்பதற்கு உறமிட்டவர்களில் தந்தை பெரியாரின் பங்கு அலாதியானது.

கடவுளை மற, மனிதனை நினை என்றும், கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் சொன்ன தந்தை பெரியாரின் உருவச்சிலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய கொள்கைகளை எடுத்தியம்பும் அதே வேளையில் அவருக்கு சிலை வைப்பதையும் ஒரு கொள்கையாக செய்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்திலே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.வீரமணி அவர்கள் பெரியார் சிலையைச் சிதைப்பதால் பெரியார் கொள்கையை அழித்துவிட முடியாது! என்றும், கழகத் தோழர்களே, முன்னிலும் வேகமாகச் செயல்படுவீர்! என்றும், ஊருக்கு ஊர் பெரியார் சிலை வைப்போம்! பெரியார் கொள்கை நாடெங்கும் பரவும் வகை செய்வோம்! என்றும் கூறியிருக்கிறார்.

ஒருவேளை தந்தை பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் தனக்காக வைக்கப்படும் சிலையையும், திரு.வீரமணி அவர்களுடைய கருத்துக்களையும் அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே! ஏனெனில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக கருப்புச்சட்டைக்காரர்கள் பல தருணங்களில் இப்படிச்சொல்வார்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். 'நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்' என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள், என்று.

தந்தை பெரியாரே சொன்னாலும் தனது அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து. அப்படியிருக்க தனக்காக சிலை வையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்களால் சொல்லப்படாமல் இருக்க அவர் பெயர் சொல்லி அவருக்கு சிலை வைப்பதும், அப்படி செய்தால்தான் அவருடைய கொள்கை நாடெங்கும் பரவும் என்று சொல்வதும் கருப்புச்சட்டை அணிந்திருக்கும் சகோதரர்களின் அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவருவது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இப்படி செய்வதால் நாடெங்கும் என்ன பரவும் என்பதற்கு ஸ்ரீரங்கம் ஒரு உதாரணமாக தெரிகிறது.

ஒரு கொள்கை நாடெங்கும் பரவுவதற்கு அந்த கொள்கையை சொன்னவருடைய சிலையை நாடெங்கும் நிறுவுவதுதான் சரி என்றால் அது அறிவு சார்ந்த ஆராய்ச்சி அல்ல என்று இஸ்லாம் மறுக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய தீபகற்பத்தில் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவனுமில்லை என்று இஸ்லாத்தை எடுத்தியம்பிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உலகில் எந்த இடத்திலும் சிலை இல்லை.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சிலை வைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் கூட உலக முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய ஓரிறைக்கொள்கை உலகில் எங்கும் பரவாமல் முற்று பெற்றுவிட்டதா?

இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரியாக திகழக்கூடியவர்களில் முதன்மையான எதிரியாக இருக்கக்கூடிய அமெரிக்காவில் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய இஸ்லாம் என்னும் ஓரிறைக் கொள்கை வேறூன்றி மரமாக வளரத்தொடங்கி விட்டது. இவ்வுலகமே சொர்க்கம் என்று வாழ்வை கடத்தக்கூடிய பல மேற்கத்திய நாடுகளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எடுத்தியம்பப்பட்ட ஒரிறைக் கொள்கை வலுவான பாதங்களை பதித்துக் கொண்டிருக்கிறது. உலகில் எந்த மூலையிலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்களை உலகில் வாழக்கூடிய கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் கருப்புச்சட்டை சகோதரர்களின் பகுத்தறிவுக்கு எதை உணர்த்துகிறது?

உலகில் சிலை வைத்துதான் கொள்கையை பரப்ப வேண்டும் என்று சொல்வது அறிவு சார்ந்த வாதமில்லை என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவு கொண்டு சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகளும் காத்திருக்கின்றன.

உலகின் எந்த இடத்திலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதாக பல தகவல்களை இவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதில் பிறமத கடவுளரை நீங்கள் விமர்சிக்காதீர்கள், அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் உங்கள் இறைவனை விமர்சிப்பார்கள் என்பதும் ஒன்று.

இந்த அடிப்படையில் ஸ்ரீரங்கத்தில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட பெரியார் சிலை சம்பவத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் போது கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருப்புச்சட்டை சகோதரர்களால் கடவுளாக்கப்படுகிறாரா என்ற கேள்வியே எழுகிறது. ஏனெனில் சமூக விரோத கும்பல்களால் தந்தை பெரியாரின் சிலைதான் உடைக்கப்பட்டது. ஆனால் கருப்புச்சட்டை சகோதரர்களால் ஈரோடு, சேலம், சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் போன்ற இடங்களில் உடைக்கப்ட்டது ஹிந்துக்கள் கடவுளாக மதிக்கக்கூடிய சாமி சிலைகள், பிள்ளையார் சிலைகள் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது. அப்படி என்றால் கருப்புச்சட்டை சகோதரர்கள் தந்தை பெரியாரை தங்களது கடவுளாக கருதுகிறார்களா?

ஒரு கொள்கையை சொன்னவரை கௌரவிப்பது என்பதும், ஓரு கொள்கையை பரப்புவது என்பதும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதிலும், அதை நடைமுறை படுத்துவதிலும் தான் இருக்கிறது. சிலை வைத்துதான் கொள்கை பரப்ப வேண்டும் என்று சொல்வது அன்பே கடவுள் என்று சொன்ன புத்தரின் பேரில் புத்த மதம் தோன்றியது போன்று, கடவுளை மறுத்த தந்தை பெரியாரை கடவுளாக்குவது போலவே இருக்கிறது.

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35:3)